தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 2 மார்ச், 2012

எம்.ஜி.ஆர் !!


ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை...
சிவாஜி கணேசன் பாட்டுத்தான்....ஆனால் எம்.ஜி.ஆருக்கும் பொருத்தமாக இருக்கிறதே...!

1936 ல் சதிலீலாவதி என்ற படத்தில் எம்.ஜி.ஆர் முதன் முதலாக அறிமுகமானார். இப்படத்தில் அவருக்கு சிறுவேடம்தான் என்றாலும், தமிழ் சினிமா என்ற மிகப்பெரிய ஊடகத்திற்கு எம்.ஜி.ஆர் வைத்த முதல் அடி இதுவாகும்.
1971-ல் வெளி வந்த 'ரிக்ஷாக்காரன்' படத்திற்கு இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது. இதன் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. அவ்விழா மேடையில் எம்.ஜி.ஆரை திரையுலகிற்கு அறிமுகப் படுத்திய எம்.கே.ராதா வந்து வாழ்த்தினார். அம்மேடையிலேயே அவரது காலில் விழுந்து வணங்கினார் எம்.ஜி.ஆர்.
மற்றொருவர், எம்.ஜி.ஆர். சினிமா உலகிற்கு அடியெடுத்து வைக்க காரணமாயிருந்த இயக்குனர் சாந்தாராம் அவர்கள்....





எம்.ஜி.ஆரிடம் கேட்ட கேள்வியும் , அதற்கு கிடைத்த பதிலும்....
இது நம்மில் பலருக்கும் கூட பொருந்தும்...!

கேள்வி : எதிர்ப்புகளைத் தாங்கக் கூடிய மனப்பக்குவத்தை எப்படி பெற்றீர்கள்?

பதில் : என் வளர்ச்சியாலோ, எனக்குக் கிடைக்கிற ஆதரவாலோ அல்லது என்னையும் அறியாமல் நான் செய்கிற தவறுகளாலோ இன்று எனக்கு எதிர்ப்புகள் இருக்கலாம். ஆனால், கடந்த காலத்தில் இப்படிப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லாமலேயே, பல துன்பங்களையும், துயரங் களையும் தாங்கி, பரிதாப நிலையில் வாழ்ந்தவன் நான். அதை எண்ணிப் பார்க்கும் போது, இந்தத் தாக்குதல்களும், எதிர்ப்பும் எனக்கு மிகச் சாதாரணமாக தோன்றுகிறது.






1940-ல் தங்கமணி என்ற பெண்ணை எம்.ஜி.ஆருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.
1942-ல் எம்.ஜி.ஆருக்கு இரண்டாம் திருமணம் சதானந்தவதியுடன் நடந்தது...இருவருமே இறந்த
தும் சோகத்திலிருந்து எம்.ஜி.ஆர். மீண்டதும் பலருக்கு இது புது விஷயமாக இருந்தது....


"
இதோ ..சதானந்தவதி- வி.என்.ஜானகி - இருவருடன் எம்.ஜி.ஆர் எடுத்துக் கொண்ட அரிய புகைப்படம்...


எம்.ஜி.ஆர் . பற்றி .....வைரமுத்துவின் “இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள்” நூலிலிருந்து...


"உங்கள் தாய்மொழி மலையாளம் என்பதை மறக்கடிப்பதற்கும் நீங்கள் தமிழ்க் கலாச்சாரத்தில் கரைந்து போனவர் என்று காட்டிக் கொள்வதற்கும் நீங்கள் எடுத்த முயற்சிகள் முழு வெற்றி பெற்றன.

மலையாள மரபுப்படித் தாயார் பெயரைத் தான் இனிஷியலாகக் கொள்வார்கள். ஆனால் நீங்களோ தமிழ் மரபுப் படி தந்தை பெயரைத்தான் இனிஷிலாகக் கொண்டீர்கள்.

உங்கள் தமிழ் உச்சரிப்பின் எந்த ஒரு வார்த்தையிலும் மலையாளத்தின் பிசிறு ஒட்டாமல் சுத்தமாய்த் துடைத்தெடுத்தீர்கள்.

‘மருதநாட்டு இளவரசி’யின் ஒப்பந்தப் பத்திரத்தின் உச்சியில் ‘முருகன் துண’என்றுதான் எழுதியிருக்கிறீர்கள். (முருகன் அவர்கள் தமிழ்க் கடவுள் என்று கருதப்படுகிறவர் என்பது கவனிக்கத்தக்கது)

நீங்கள் முதன் முதலாய் இயக்கித் தயாரித்த “நாடோடி மன்னனில்” தொடக்கப் பாடலாக “செந்தமிழே வணக்கம்” என்று தான் ஆரம்பித்தீர்கள். இப்படி…..இப்படியெல்லாம் அந்நியத்தோலை உரித்து உரித்துத் தமிழ்த் தோல் தரித்துக் கொண்டீர்கள்.

உங்களைப் பற்றி என் செவிகள் சேகரித்திருக்கும் செய்திகள் ருசியானவை.

ஒரு பாடகர் ஒரு மேடையில் உங்கள் பழைய பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறார். இரண்டு மணி நேரம் கரைந்து போன நீங்கள் இப்போது என் கைவசத்தில் இருப்பது இது மட்டும் தான் என்று உங்கள் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைக் கழற்றி அந்தப் பாடகருக்குப் பரிசளிக்கிறீர்கள் ; அது உங்கள் ஈகைக்குச் சாட்சி.



நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறந்து போன உங்கள் இரண்டாவது மனைவியின் இல்லம் சென்றபோது படுக்கையறையின் கட்டிலைப் பார்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதிருக்கிறீர்கள் ; அது உங்கள் ஈரத்திற்குச் சாட்சி.

தி.மு.க மாநாடுகளில் மாநாடு முடிந்ததும் பந்தலுக்கடியிலேயே படுத்துக்கிடக்கும் வெளியூர் மக்களுக்கு அவர்களே அறியாமல் அதிகாலைச் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்துவிட்டுப் போவீர்களே ! அது உங்கள் மனிதாபிமானத்துக்குச் சாட்சி.


பொதுக் கூட்டங்கள் முடித்துவிட்டு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வைகை அணைக்கு வந்து பொன்னாங்கண்ணிக் கீரை இருந்தால் சாப்பிடுவேன் என்று நீங்கள் நிபந்தனை விதிக்க, ஆளுக்கொரு திசையில் அதிகாரிகள் பறக்க, பொன்னாங்கண்ணிக் கீரை தயாராகும் வரை சாப்பிடாமல் இருந்தீர்களாமே ! அது உங்கள் உறுதிக்குச் சாட்சி.."

எம்.ஜி.ஆர். தன்னை பார்க்க யார் வந்தாலும் முதலில் இந்த கேள்வியைத்தான் கேட்பாராம்...."சாப்பிட்டீர்களா..?இல்லாவிட்டால் முதலில் சாப்பிடுங்கள்..அப்புறம் பேசலாம்.."
பசி என்றால் என்னவென்று அறிந்தவர் அவர்....
பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ , அதை நீங்கள் மற்றவர்களுக்கு செய்யுங்கள்!


இதோ , எம்.ஜி.ஆரை சதிலீலாவதி படத்தில் அறிமுகம் செய்த இயக்குனர் எல்லிஸ்.ஆர்.டங்கன்













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக